சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ( ஜன-21 ) காலை 9:௦௦ மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜை கோலாகலமாக துவங்கியது. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், வரும் ௨3ம் தேதி, கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் யாகத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 7:௦௦ மணிக்கு யாகசாலை பிரவேசம் துவங்கியது. தொடர்ந்து, கடஸ்த்தாபனம், முதற்கால யாகபூஜை, ஜபம், ஹோமம் நடத்தப்பட்டு, இரவு 9:௦௦ மணிக்கு மஹா பூர்ணாஹுதி தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.
பின், அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவேரி, கிருஷ்ணா, கோதவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணறு, அறுபடை முருகன் திருத்தலங்கள் என, பதினைந்து இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட தீர்த்தமானது, நேற்று காலை வேங்கீஸ்வரர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்று காலை 9:௦௦ மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கி 12:௦௦ மணிக்கு மகா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறுகிறது. பின், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை துவங்கி, இரவு 8:30 மணிக்கு பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறும். இதே போல், சனிக்கிழமை நடைபெறும் யாகசாலை பூஜைகளுக்கு பின், ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.