மதுரை : மாநகராட்சி நுாறு வார்டுகளிலும் தேர்தல்பணிக்குழு ஏற்படுத்தி தேர்தல் பணிகளை துவக்க மதுரையில் நேற்று நடந்த பா.ஜ., மையக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேற்று காலை மண்டல், மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கூட்டமும், மதியம் மையக்குழு கூட்டமும் நடந்தது. நகர் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர்கள் ராஜரத்தினம், சசிராமன், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர்கள் பாலமுருகன்,பாலகிருஷ்ணன், பாலசுந்தர், செல்வகுமார், பொருளாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளதால் உடனடியாக நுாறு வார்டுகளிலும் அங்குள்ள நிர்வாகிகளை கொண்டு தேர்தல் பணிக்குழு ஏற்படுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: மதுரை கோயில் நகரம் என்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் 25 வார்டுகளை கேட்க மாநில தலைமையிடம் முறையிட்டுள்ளோம். சட்டசபை தேர்தலின் போது ஒரு எம்.எல்.ஏ., தொகுதியை அ.தி.மு.க., ஒதுக்கியது. அதிலும் பா.ஜ., கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் பா.ஜ.,க்கு உரிய பிரதிநிதித்துவத்தை கூட்டணியில் வழங்குவதை உறுதி செய்யவும் தலைமையிடம் கேட்டுள்ளோம் என்றனர்.