காஞ்சிபுரம்-வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணையை தாண்டி தண்ணீர் தொடர்ந்து செல்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, செய்யாறுகளில், வடகிழக்கு பருவமழையால் வெள்ளம் ஏற்பட்டது.மாவட்டத்தில் விவசாயத்திற்கு பெரும்பங்கு வகிக்கும் இந்த இரு ஆறுகளிலும் கரை புரண்டு வெள்ளம் ஓடி, பல ஆண்டுகள் கடந்த பின் நடப்பாண்டு, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. கடந்த ஆண்டு வெங்கச்சேரி செய்யாற்று குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி, இரு மாதங்களாக தண்ணீர் செல்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.வெங்கச்சேரி விவசாயிகள் கூறியதாவது:கடந்த ஆண்டுகளில் பருவமழையின்போது ஆற்றில் ஒரு ஓரமாக தண்ணீர் செல்லும். ஒரு வாரத்தில் முழுமையாக வற்றிவிடும்.இந்த ஆண்டு, மாவட்டத்தில் உள்ள இரு ஆறுகளிலும் இன்னும் தண்ணீர் செல்வது ஆச்சரியமாக இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும். இந்த ஆண்டு அந்த நிலை இருக்காது. மூன்று போகம் விவசாயத்திற்கும் தண்ணீர் போதுமானதாக இருக்கிறது. வெங்கச்சேரியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, பல கிராம விவசாயிகளுக்கு பெரும் பயனாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.