கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலைப் பாதைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணித்திட வட்டார போக்குவரத்து மற்றும் காவல் துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., விஜய்பாபு, ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இம்மாதம் நடந்த குற்ற சம்வங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து, கல்வராயன்மலை முதல் கள்ளக்குறிச்சி வரையுள்ள மற்றும் மலைப் பாதைகளில் செல்லும் வாகனங்களை காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும்.
கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த மாதத்தை விட இம்மாதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது. அதேபோல், வரும் காலங்களில் சாலை விபத்துகள் நிகழாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சாய்வர்தினி, நகராட்சி கமிஷனர் குமரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன், டி.எஸ்.பி.,க்கள் ராஜலட்சுமி, மணிமொழின், கங்காதரன் மற்றும் தாசில்தார்கள் பங்கேற்றனர்.