கோவை: ''பொங்கல் பொருட்கள் வாங்கியது தொடர்பாக, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கூறினார்.கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று ஹெச்.ராஜா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக மக்களுக்கு வினியோகம் செய்ய வாங்கப்பட்ட பொங்கல் பொருட்கள், பல இடங்களில் தரமற்றவைகளாக இருந்தன. இப்பிரச்னையை மறைக்க, குடியரசு தினத்தன்று தமிழக அலங்கார ஊர்தி அனுமதிக்கப்படவில்லை என, புதிய பிரச்னையை கிளப்பி வருகின்றனர். ஆனால், தி.மு.க., - காங்.,மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக, 2004 முதல், 2014 வரை ஆட்சியில் இருந்தபோதும், தமிழக அலங்கார ஊர்தி, 2009 மற்றும் 2014ல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது. இது குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கடிதம் எழுதி தெரிவித்துள்ளார்.பொங்கல் பொருட்கள் வாங்கியது தொடர்பான விவரங்களை, வெள்ளை அறிக்கையாக, தமிழக அரசுவெளியிட வேண்டும். தமிழகத்துக்கு திராவிட அரசுகள் எதுவும் செய்யவில்லை.இவர்கள் மொழி வெறுப்பு, ஜாதி வெறுப்பு, மத வெறுப்பு உள்ளிட்டவைகளை கொண்டு வந்தனர். தி.மு.க., அரசு வந்தவுடன், பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையால் பலர் மதுபழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.