மூணாறு: தேவிகுளம் தாலுகாவில் மூணாறு உள்பட ஒரு சில பகுதிகளில் டெபுடி தாசில்தார் ரவீந்திரன் விதிமுறைகள் மீறி வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யுமாறு கலெக்டர் ஷீபா ஜார்ஜ்க்கு அரசு உத்தரவிட்டது.
தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் 1999 ல் அடிஷனல் தாசில்தாராக கூடுதல் பொறுப்பு வகித்த டெபுடி தாசில்தார் ரவீந்திரன் விதிமீறி 530 க்கும் அதிகமாக நிலப்பட்டாக்கள் வழங்கினார். அவை சட்டத்திற்கு புறம்பாக வழங்கியதால் ரவீந்திரன் பட்டா என அழைக்கப்படுகிறது.
கடந்த 2007ல் அச்சுதானந்தன் தலைமையிலான இடது சாரி கூட்டணி அரசு மூணாறில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் போது ரவீந்திரன் வழங்கிய பட்டாக்கள் குறித்து தெரிந்தது.
அவற்றை ரத்து செய்யும் நடவடிக்கை பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆனது. 1964ல் கேரளா நில பதிவு சட்டம் 893 படியும் 1977 ல் கண்ணன் தேவன் ஹில்ஸ் சட்டம் 21 (1) படியும் தவறான ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ்க்கு வருவாய்துறை ஜன.18ல் உத்தரவிட்டது. ரவீந்திரன் வழங்கிய பட்டா நிலங்களில் பெரும்பாலும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
மூணாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், நட்சத்திர ஓட்டல்கள் ரவீந்திரன் வழங்கிய பட்டா நிலங்களில் உள்ளன. அவை 2007ல் ஆக்கிரமிப்புகள் அகற்றியபோது விவாதங்களில் சிக்கி தப்பின. அப்பிரச்னை மீண்டும் தலை தூக்கி உள்ளதால் வர்த்தக ரீதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் புதிய பட்டாக்கள் வழங்க அரசு முன்வந்துள்ளதால் விதிமீறி வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யும் மறைவில் அதனை சரி செய்யும் யுக்தியாக இருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.