கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், திருச்சி - கரூர் மற்றும் மதுரை - சேலம் புறவழிச்சாலைகளில் சுக்காலியூர், திருக்காம்புலியூர், வெங்கக்கல்பட்டி, மணவாசி மற்றும் குளித்தலை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக சாலைகள் பராமரிக்கும் பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் நிறுவனத்திடம், பொதுமக்களிடம் சுங்கவரி வசூல் செய்தும், சாலைகளை முறையாக பராமரிக்காத காரணத்தால் ஏன் உங்களது சுங்கவரி வசூலிக்கும் உரிமையினை ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டிருந்தோம். அந்த கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில், பல்வேறு சீரமைப்பு பணிகளை துவக்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர். அதன்படி சீரமைப்பணிகள் ஆய்வு செய்யப்படுகிறது. மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவால், பரிந்துரைக்கப்பட்டபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கைகள், திருப்தியளிக்கும்பட்சத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திருப்ப பெறப்படும். மாறாக பணிகள் தரமில்லாமலோ, குறைபாடுகளோ இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். தேசிய நெடுஞ்சாலை மேலாளர் முருகபிரகாஷ் (திண்டுக்கல்), உதவி கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.