கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்குதற்காக தகுதிவாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, இலவச பேருந்து பயண சலுகை அட்டை, சக்கர நாற்காலி, காதொலி சுருவி, செயற்கை கால், ஊன்று கோல்கள், நடை பயிற்சி உபகரணங்கள், பார்வையற்றோருக்கான கை கடிகாரம், திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் போன்ற திட்டங்கள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸகூட்டர்களும், தையல் பயிற்சிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய ஏதுவாக நேர்காணல் நடந்தது. டி.ஆர்.ஒ., லியாகத், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதின், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, அரசு சிறப்பு மருத்துவர் நித்தியகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.