குளித்தலை: குளித்தலை அடுத்த, பொய்யாமணி புலவர் புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மோகன், 24. இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:45 மணியளவில் கண்டியூரில் இருக்கும் தனது சகோதரியை பார்த்துவிட்டு, நண்பரின் பைக்கில் ஊருக்கு வந்தார். அப்போது கோட்டைமேடு பெட்டவாய்த்தலை மங்கம்மா சாலையில், மேட்டுமருதூர் தனியார் மொபைல்போன் டவர் அருகே சாலை விதிகளை பின்பற்றாமல், மிளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கதிர் அறுக்கும் இயந்திரத்தில் மோகன் ஓட்டி சென்ற பைக் மோதியது. இதில் மோகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்தார். குளித்தலை போலீசார் விசாரித்து, திருவண்ணாமலை மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த கதிர் அறுக்கும் இயந்திர டிரைவர் ரவிச்சந்திரன், 28, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.