உடுமலை:உடுமலை - பொள்ளாச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையோரம், விபத்தை ஏற்படுத்தும் வகையில் லாரிகள் நிறுத்தப்படுவது, அதிகரிக்கிறது.கேரளா மாநிலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தென் மாவட்டங்களை இணைக்கும் வகையிலான தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி, உடுமலை வழியே செல்கிறது.தற்போது, பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, நீண்ட துாரம் இயக்கப்படும் சரக்கு லாரிகள், இவ்வழித்தடத்திலேயே இயக்கப்பட்டும் வருகின்றன.அதேபோல், வாகனங்களில் இயக்கம், தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை மையப்படுத்தி, ரோட்டை ஒட்டிய பகுதிகளில், தற்காலிக உணவகங்களும், 'டீ' கடைகளும் பெருகி வருகின்றன.இதன் காரணமாக, உணவு உண்ணவும், ஓய்வு எடுக்கவும் கருதும் லாரி டிரைவர்கள், ரோட்டை ஒட்டி தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துவதும் அதிகரிக்கிறது.வளைவு, விபத்து அபாயம் உள்ள இடங்களில் இது போன்று வாகனங்களை நிறுத்துவதால், அதிவேகமாகச்செல்லும் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:முக்கோணம், கெடிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில், ரோட்ரோரம் நீண்ட தொலைவுக்கு, சரக்கு லாரிகள் நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.விதிமீறி விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை, தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் எச்சரித்து அனுப்ப வேண்டும். ஓய்வெடுக்க விரும்பும் லாரி டிரைவர்கள், தங்களது வாகனத்தை, போதிய வசதி உள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.