செய்திகள் சில வரிகளில்... பராமரிப்பில்லாத நல மைய கட்டடம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில்... பராமரிப்பில்லாத நல மைய கட்டடம்
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

உடுமலை நகராட்சி செல்லமுத்து வீதி அருகே, ஆதிதிராவிடர் மனைப்பிரிவில், குழந்தைகள் நல மைய கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது. சுற்றுப்பகுதி வார்டுகளைச்சேர்ந்த குழந்தைகள் பயன்பெற்று வந்தனர்.வளாகத்தில், குழந்தைகள் நல மையம் எண்-17 ம், இணை உணவு இருப்பு வைப்பதற்கான இரு அறைகளும், பயன்பாட்டில் இருந்தன.இந்நிலையில், தற்போது இவ்வளாகம் பராமரிப்பின்றி, புதர் மண்டி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.


வளாகத்துக்கான சுற்றுச்சுவர் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது; கேட் சேதப்படுத்தப்பட்டுள்ளது.கட்டடங்கள் சேதமடையும் வகையில், சுவர்களில், மரங்கள் முளைத்துள்ளன. புதர் மண்டி கிடப்பதால், அருகிலுள்ள, குடியிருப்புகளுக்கு, விஷ ஜந்துகளால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் இக்கட்டடத்தை உடனடியாக புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உயர்மட்ட பாலம் தேவை!

உடுமலை-கொழுமம் ரோட்டில் பிரிந்து, ஜக்கம்பாளையம், கிளுவங்காட்டூர் வழியாக செல்லும் ரோடு, குறிச்சிக்கோட்டை-கொமரலிங்கம் ரோட்டில் இணைகிறது. இந்த ரோட்டில், ஜக்கம்பாளையம் பிரிவு அருகே, மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது.ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில், ஓடையில் நீரோட்டம் அதிகரித்து, பாலத்தின் மேற்பகுதியில், வெள்ளமாக செல்கிறது. அப்போது, கிராமங்களுக்குச்செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களும், தக்காளி உட்பட காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வரும் வாகனங்களும், பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் உயரத்தை கணக்கிட, 'ப்ளட் கேஜ்' பொருத்தப்பட்டது. இந்த கட்டமைப்பும், பராமரிப்பில்லாமல் உள்ளது.எனவே, தரைமட்ட பாலத்தை மேம்படுத்தி மழைக்காலத்திலும், போக்குவரத்து பாதிக்காமல், இருக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது. உடுமலை நகரப்பகுதியில், 2கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இந்த ரோடு அமைந்துள்ளது.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில், நகர எல்லை வரை, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.இதனால், சென்டர்மீடியனுக்கும், ஆக்கிரமிப்புக்கும் இடையிலான குறுகலான இடத்தில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற, வாகன ஓட்டுனர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
சாலை பணிக்கு பூமி பூஜை
உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில், மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவ்வகையில், கணக்கம்பாளையம் ஊராட்சியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக தார் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. குறிப்பாக, வெங்கடேசா லே- அவுட், வெஞ்சமடை, ரங்கநாதன் லே அவுட் பகுதிகளில் கான்கிரீட் சாலையும், ரங்கநாதன் லே-அவுட்டில் தார் சாலையும் அமைக்கப்படுகிறது.
இதுதவிர, குழாய் பதிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கான, பூமி பூஜை, ஊராட்சித்தலைவர் காமாட்சி தலைமையில் நேற்று நடந்தது.இதில், மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தேர்தல் பணிக்கு ஆன்லைன் பயிற்சி?நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் அதிகாரிகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.'இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், வேட்பு மனு பரிசீலனை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்பார்கள்,' என்றனர்.மயான புகையால் மாசுபொள்ளாச்சியில், உடுமலை ரோட்டில் உள்ள பொது மயானத்துக்கு அருகே மின்மயானம் அமைந்துள்ளது. ரோட்டரி கிளப்பால் பராமரிக்கப்படுகிறது. இம்மயானத்தை சுற்றிலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.மயானத்தில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் போது, புகை போக்கியின் வழியாக புகை வெளியேற்றப்படுகிறது. அந்த புகை, குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி, மக்களை அவதிக்குள்ளாக்குவதாகவும், அச்சத்தையும், மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மயான புகையை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி அலுவலகத்துக்கு பூமி பூஜைகிணத்துக்கடவு ஒன்றியம், வடபுதுார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் செயல்பட்டது. இக்கட்டடம் நீண்ட நாட்களாக பழுடைந்து காணப்பட்டதால், புது கட்டடம் அமைக்க கோரிக்கை வலுத்தது.
இதனை தொடர்ந்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 23.57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.புதிய ஊராட்சி கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சி தலைவர் அபின்யா தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாமணி, ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு கொரோனா தொற்று காரணமாக, இம்மாதம் இறுதிவரை, நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், கல்வி தொலைக்காட்சிவாயிலாக,மாணவர்கள் படிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில்,தொற்று பரவுவது தீவிரமடைந்து வரும் நிலையிலும், தொடக்க, நடுநிலை வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு, கற்றல் அடைவுகள் வலுவூட்டும் பயிற்சி நடக்கிறது.பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு நேரில் வர வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வருவதால், தொற்று பரவும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஆன்லைன் வகுப்பு கையாள தேவையான டிஜிட்டல் கன்டென்ட் உருவாக்குதல், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல், பயிற்சி வினாத்தாள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளைதான் பள்ளிகளில் மேற்கொள்கிறோம். இதை வீட்டிலிருந்தே செய்ய முடியும்.மாணவர்கள் பள்ளிக்கு வரும் வரையாவது, எங்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும்' என்றனர்.
கட்டுமான பொருட்களால் இடையூறு
பொள்ளாச்சி நகரத்தில், அதிகபட்ச வரிவிதிப்பு இருந்தாலும், அதற்கேற்ப நகரை பராமரிப்பதில் நகராட்சி நிர்வாகம் கோட்டை விடுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ரோடுகளை ஆக்கிரமித்து, கட்டுமான பொருட்கள் குவிப்பது பெரும் பிரச்னையாக கிளம்பியுள்ளது. நகரின் பல இடங்களில், வீடுகள், வர்த்தக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றுக்கான கட்டுமான பொருட்களை, கட்டட உரிமையாளர்கள், தெருவில் குவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை.
நகராட்சி அதிகாரிகள், இது போன்று ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அபராதம் விதிப்பு, கட்டட உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே, இதை கட்டுப்படுத்த இயலும்.ரோட்டை விரிவுபடுத்தணும்!ஆனைமலை அருகே, கோட்டூர் - அங்கலக்குறிச்சி ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
இந்நிலையில், கோட்டூர் சந்தைப்பேட்டையில் இருந்து, பேரூராட்சி அலுவலகம் வரையில், ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகலாக உள்ளது.குடியிருப்புகள், கடைகள் ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு இடம் உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து, விபத்துகள் ஏற்படுகிறது.மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், ரோடு விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X