பொன்னேரி : மழைக்கு தப்பிய பயிர்களை அறுவடை செய்து வரும் விவசாயிகள், எதிர்பார்த்ததைவிட நல்ல விலை இருந்தும், விளைச்சல் இல்லாததை எண்ணி கவலை அடைந்து உள்ளனர்.
மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், சம்பா பருவத்திற்கு, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில், நெல் பயிரிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கன மழையால், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.மழைக்கு தப்பிய நெற்பயிர்களை பெரும் சிரமத்திற்கு இடையே விவசாயிகள் காப்பாற்றினர்.
அறுவடை செய்ய எண்ணிய நிலையில், சில தினங்களாக எதிர்பாராத மழை பெய்து, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அறுவடை பணிகளில் தொய்வு ஏற்பட்டது.இரண்டு தினங்களாக மழை இல்லாத நிலையில், அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஏக்கருக்கு, 15 - 20 மூட்டைகளே மகசூல் கிடைக்கிறது. விலை இருந்தும், மகசூல் இல்லாததை எண்ணி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது:கடந்த ஆண்டு, ஒரு மூட்டை நெல், 1,200- - 1,300 ரூபாய் விலை போனது. இந்த ஆண்டு, 1,450- - 1,600 ரூபாய் வரை, நெல்லின் தரத்திற்குகேற்ப விலை போகிறது. எதிர்பார்த்ததைவிட நல்ல விலை இருந்தும், மகசூல் இல்லை.வியாபாரிகள் போட்டி போட்டிக் கொண்டு விலை ஏற்றி வந்தனர்.
மழை பெய்ததால் நெல்லில் ஈரப்பதம் அதிகமானதை தொடர்ந்து. தற்போது நெல் வாங்குவதற்கே தயக்கம் காட்டுகின்றனர். அவற்றை உலர வைத்து விற்பனை செய்கிறோம்.விளை நிலங்களிலும், தண்ணீர் தேங்கி ஈரமாக இருப்பதால், அறுவடை பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், தற்போது, இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. இதனால் அறுவடை கட்டணம், இரு மடங்காகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.