திருத்தணி : தார் சாலைக்காக ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர்பேட்டை கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ரயில்வே பாலம் வழியாக, வள்ளூவர்பேட்டைக்கு மண் சாலையில் செல்கின்றனர்.மழை பெய்யும் போது, மண் சாலை சேறும், சகதியுமாகவும், மழை நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் நடந்தும் மற்றும் வாகனங்களில் செல்வதற்கும் கடும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், வள்ளுவர்பேட்டைக்கு செல்வதற்கு, 100 மீட்டர் தார் சாலை அமைக்க, 3.50 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து பணிகள், ஒன்றரை மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது.தற்போது, மண் சாலையில், ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் இதுவரை சாலை அமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.எனவே, விரைந்து தார் சாலைப் பணிகள் முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.