காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மற்றும் காஞ்சி புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் இணை இயக்குனரிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்:
தமிழகத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஐந்து ஆண்டுகள் பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க அரசின் அனுமதி கோரி, 2018ல் பொது சுகாதார இயக்குனர் அவர்களால், அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டு, அரசு முதன்மை செயலரால் நிதித்துறைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது.
இருப்பினும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதுதொடர்பான அரசின் கவனத்தை ஈர்க்க, பிப்., 3ல் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி உரிய தீர்வளிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.