காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கை, அண்ணா நெசவாளர் குடியிருப்பில், மழை நீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை அண்ணா நெசவாளர் குடியிருப்பில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள வீடுகளில் இருந்து வீட்டு உபயோக கழிவு நீர் செல்லும் மழைநீர் வடிகால்வாயை, மாநக ராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என, இப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்னறர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:அண்ணா நெசவாளர்குடியிருப்பு வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும், மழை நீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.இந்த கழிவு நீரில் சேப்பங்கிழங்கு செடியும் செழிப்பாக வளர்ந்து உள்ளது.நாள் கணக்கில் தேங்கிஉள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. மாலை நேரத்தில் படையெடுக்கும் கொசுக்களால் வீட்டில் நிம்மதியாக துாங்கவும் முடியவில்லை.
சாப்பிட வாய் திறந்தால், கொசு உள்ளே சென்று விடுகிறது. இதனால், கொசு விரட்டி சுருள், கொசு லிக்யூட் என, மாதந்தோறும் செலவு செய்ய வேண்டி உள்ளது.கொசுக்கடியால் அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. கால்வாயை துார் வாரி கழிவு நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.