கொடுங்கையூர் : சென்னை எருக்கஞ்சேரியில், பாரிமுனை கந்தசுவாமி கோவிலுக்குச் சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உதவியுடன் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர் அந்த இடத்தில், கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.சென்னை பாரிமுனையில், கந்தக் கோட்டம் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இக்கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.நுாறு ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தார்கள், வாரிசு இல்லாத செல்வந்தர்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என பலரும், தங்க, வைர நகைகள், கட்டடங்கள், நிலம் ஆகியவற்றை கோவிலுக்கு தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கி உள்ளனர்.
அந்த வகையில், கந்தசுவாமி கோவிலுக்கு, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.அவற்றை முறையாக பராமரிக்காமலும், பத்திரப்பதிவு செய்யாமலும் விட்டதால், பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன.இதே போல் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கந்தசுவாமி தெருவில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்பட்டு, அங்கு கட்டடம் கட்டும் பணி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் தரப்பில் கூறப்படுவதாவது:வீட்டு எண் 10/23, கந்தசுவாமி தெரு, எருக்கஞ்சேரி, கொடுங்கையூர் என்ற இடத்தில், கந்தசாமி கோவிலுக்குச் சொந்தமான பழைய கட்டடம் இருந்தது. அதை 50 லட்சம் ரூபாய்க்கு, உள்ளூர் பிரமுகர்களும், கோவில் நிர்வாகிகளும் சேர்ந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு விற்றுள்ளனர்.தற்போது, அவர்கள் உதவியுடன் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது.கோவில் இடத்தில் கட்டுமான பணிக்கு, எந்த அரசு நிர்வாகம் கட்டட அனுமதி வழங்கியது எனத் தெரியவில்லை.
கோவில் நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த கோவிலுக்கு அறங்காவலர்கள் இல்லாததால், கோவில் நிர்வாகிகள் முன்னிலையில், கோவில் இடங்கள் விற்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துக்களை முறையாக ஆவணப்படுத்தாததும், பராமரிக்காததும், கோவில் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு, நிலம் கபளீகரம் செய்ய காரணமாக உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள், கடந்த 30 ஆண்டுகளாக கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன.கந்தசுவாமி கோவில் இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, கடந்தாண்டு 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கண்துடைப்பிற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகள், தற்போது ஜரூராக நடந்து வருகின்றன. இதை, அறநிலையத் துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது,'கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வீடு கட்ட முடியாது. எங்களிடம் யாரும் முறையாக அனுமதி பெறவும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
அறநிலையத் துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினரிடம் உரிய விளக்கம் கேட்டு, அந்த இடத்தை மீட்டு, அறநிலையத் துறை வசம் கொண்டுவர வேண்டும் என்பது, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.