காவலருக்கு உருட்டுக்கட்டை அடி
ஓட்டேரி: ஓட்டேரி, சாமி பக்தன் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 35; தலைமை செயலக ஊழியர். இவரது கணவர் லோகநாதன், 38.மகேஸ்வரிக்கும், தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய காவலர் லட்சுமிபதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், லட்சுமிபதியிடம் உமா மகேஸ்வரி, 4 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கேட்க, லட்சுமிபதி நேற்று முன்தினம் சென்ற போது உமா மகேஸ்வரியும், அவரது கணவர் லோகநாதனும் சேர்ந்து, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்.புகாரின்படி கணவன், மனைவி இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'பைக்'குகள் திருடியவருக்கு ‛'காப்பு'
மாதவரம்: மாதவரம், பொன்னியம்மன் மேடு, கற்பகம் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் குமார், 20; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 19ம் தேதி இரவு, வீட்டருகே நிறுத்தி வைத்த இவரது இரு சக்கர வாகனம் திருடு போனது. மாதவரம் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை, மாதவரம் சாஸ்திரி நகர் வாகன சோதனையில், வியாசர்பாடி சுந்தரம், 6வது தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ், 20, என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில், இரு சக்கர வாகனங்களை திருடியது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
'லேப்டாப்' திருடியோர் சிக்கினர்
அசோக் நகர்: அண்ணா நகரைச் சேர்ந்தவர் சையது சாஜ்ஜத், 25; பொறியாளர். இவர் கடந்த 8ம் தேதி, அசோக் நகர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு சென்றார். சிறுது நேரம் கழித்து வந்து பார்த்த போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, 'லேப்டாப்' திருடப்பட்டிருந்தது.அசோக் நகர் போலீசார் விசாரித்து, தொடர்புடைய திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல், 21, அவரது கூட்டாளிகளான சரண்ராஜ், நித்தி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
நகை திருடிய சிறுவன் கைது
தாம்பரம்: தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 36; மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.கடந்த, 14ம் தேதி பொங்கலன்று மதியம் 12:00 மணியளவில், தன் கடைக்கு பூஜை செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார். திரும்பி வந்த போது, வீட்டில் கைப்பையில் இருந்த, 5 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த பீர்க்கன்காரணை போலீசார், திருட்டில் ஈடுபட்ட 16 வயதுடைய இரண்டு சிறுவர்களில் ஒருவரை, நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
தற்கொலை சம்பவங்கள்
சிட்லபாக்கம்: சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி, மேற்படிப்பு தொடர்பாக, தாயுடன் விவாதித்தார். தாய் - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், நேற்று காலை மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி அருகே, சாலையோரம் பூட்டி இருந்த கடையின் முன்பு, நேற்று காலை, வாலிபர் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர் மாங்காடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜசேகர், 33, என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொரட்டூர்: கொரட்டூர், மத்திய நிழற்சாலையைச் சேர்ந்தவர் சுனில்குமார். அவரது மகள் விருந்தா, 20; துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தாண்டு இறுதி தேர்வுக்காக, சரியாக படிக்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம், தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். ஆனால், நேற்று அதிகாலை 2:30 மணி அளவில், அவரது பெற்றோர் பார்த்த போது, விருந்தா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.