ராயப்பேட்டை : சென்னையில், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் திருடுபோவது குறித்து, போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை முழுதும் பிரதான சாலைகள், உட்புற சாலைகள் என, அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும், தங்களது பகுதிக்கு உட்பட்ட இடங்களில், கண்காணிப்பு கேமராக்களை, நன்கொடையாளர்கள் உதவியுடன் அமைத்தனர்.அவற்றை காவல் நிலையங்களில் அமர்ந்த படி கண்காணிக்கவும், ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆனால், உரிய கண்காணிப்பு இல்லாததால், அவை ஒவ்வொன்றாக திருடப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் பழுதடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு உள்ளன. ராயப்பேட்டை கத்தீட்ரல் சாலை மேம்பாலம் அருகே நடைபாதையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா திருடப்பட்டுள்ளது. பல இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். திருடப்பட்ட இடங்களில், மீண்டும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மக்களின் பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.