பொள்ளாச்சி;பொள்ளாச்சி விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்த, பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து, பயிர் சுழற்சி மேற்கொள்கின்றனர்.ஒரு விளைநிலத்தில், ஒரே வகை பயிரை திரும்பப்திரும்ப சாகுபடி செய்யும் போது, அப்பயிர் அதிகம் எடுத்துக் கொள்ளும் சத்துக்கள் மண்ணில் பற்றாக்குறையாகி, மண் வளம் சீர்கெடுகிறது. மேலும், அப்பயிரை தாக்கும் பூச்சிகள், நோய் காரணிகள் நிலத்தில் நிரந்தரமாக தங்கி, பல்கி பெருகி, மகசூல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதற்கு தீர்வாக, பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்துகிறது. குறிப்பாக, வேர் முடுச்சுகளில் நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தை சேமிக்கும் பயறு வகைகளை பயிரிட்டால், மண் வளம் பாதுகாக்கப்படும், என, வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவித்துள்ளார்.மேலும், அவர் கூறியதாவது:தென்னை சாகுபடி அதிகமுள்ள பொள்ளாச்சி பகுதியில், பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால், நிலங்களில் உள்ள குறிப்பிட்ட சத்துக்கள் குறைகின்றன. இதனால், மண் வளம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைவு ஏற்படுகிறது.ஒரு வகை பயிர் சாகுபடி செய்து, அறுவடை முடிந்த பின், உளுந்து, தட்டை உள்ளிட்ட பயறு வகைகளை சாகுபடி செய்யலாம். பயறு வகை செடிகள் வேர் முடிச்சுகளில் நைட்ரஜன் சத்துக்களை சேமித்து வைக்கின்றன. இதனால், மண்வளம் மேம்படுகிறது.மறுமுறை வேறு பயிர் சாகுபடி செய்யும் போது, நல்ல மகசூல் கிடைக்கிறது. தென்னையிலும் ஊடுபயிராக பயறு வகைகளை சாகுபடி செய்து, மண் வளத்தை மேம்படுத்தலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.