திருத்தணி : நகரங்களை தொடர்ந்து ஊராட்சிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகள் உள்ளன. நகரங்களில் வைக்கப்பட்டு வந்த பேனர் கலாசாரம், தற்போது ஊராட்சிகளிலும் அதிகரித்து வருகிறது.திருத்தணி அடுத்த மத்துார், வேலஞ்சேரி, கே.ஜி.கண்டிகை ஆகிய ஊராட்சிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், சுபநிகழ்ச்சிகளுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைத்து வருகின்றனர்.உயிர் விபத்துக்கள் ஏற்படுவதால், பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் பேனர்கள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.இருப்பினும் ஊராட்சிகளில் பேனர்கள் வைப்பதை ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் தடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, பேனர்கள் வைப்பதற்கு நிரந்தரமாக தடைவிதித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.