உடுமலை:மாநிலம் முழுவதும் பருவமழை ஓய்ந்து தற்போது, கடும் குளிரும், வெயிலும் அடித்து வருகிறது. இதனால், சீதோஷ்ண நிலை மாறி வருகிறது.ஒரு மாத காலமாக, நிலவி வரும் இப்பிரச்னையால், பலரும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, கொரோனா, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால், மருத்துவமனைகள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாகக்காணப்படுகிறது.
இவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் சிகிச்சைக்கு என, பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 24 மணி நேர, புறநோயாளிகள் வார்டும் செயல்படுகிறது.சுழற்சி முறையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரியும் நிலையில், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவப்பணிகள் அலுவலர்கள் கூறுகையில், 'உள்நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை குறைக்க, அவர்களின் குடும்பத்தாரிடையே நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.