ஆர்.கே.பேட்டை : எதிர்பாராதவிதமாக கொட்டித்தீர்த்த கன மழையால், நிரம்பி வழிந்த ஏரி உபரி நீரால், கிராம சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை மற்றும் செல்லாத்துார் இடையே உள்ள ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த நவ., மாதம் பெய்த கன மழையால், இந்த ஏரி முழுவதுமாக நிரம்பியது. மேலும், உபரி நீர் மடுகூர் ஓடை வழியாக பாய்ந்து வருகிறது.உபரி நீர் வழிந்து செல்லும் செல்லாத்துார் கிழக்கு பகுதியில், ஸ்ரீகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
சோளிங்கர் -- திருத்தணி மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இந்த கிராம சாலை பகுதியில், வாகனஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலை திருப்பத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இந்த மார்க்கத்தில் அமைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் அரசு தொடக்க பள்ளி, அங்கன்வாடிக்கு வந்து செல்வோரும், சாலை பள்ளத்தால் தவித்து வருகின்றனர்.