உடுமலை:கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, 300க்கும் மேற்பட்ட பஸ்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.பஸ் ஸ்டாண்டில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், 11 ஆண்டுக்கு முன், வி.பி., புரம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பின், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒரு ஆண்டாக பணி இழுபறியாகி வருகிறது.இந்நிலையில், கடந்த மாதம், பில்லர்கள் அமைக்க குழி தோண்டப்பட்ட நிலையில், ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. எனவே, விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், பஸ் ஸ்டாண்ட் பணி நடக்கும் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, பழநி ரோட்டில், கன ரக வாகனங்கள் அதிகளவு நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாற்று இடம் ஒதுக்கீடு செய்யவும், தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.