உடுமலை:அமராவதி, நொய்யல் என பழமையான ஆற்றங்கரை நாகரீகத்தின் தடயங்களை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்துக்கு, தொல்லியல்துறை அலுவலகம் இதுவரை உருவாக்கப்படவில்லை. அருங்காட்சியகம் அமைத்து, தொன்மையான வரலாற்றுச்சின்னங்களை பாதுகாக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 6 தாலுகாவை பிரித்து, திருப்பூர் மாவட்டம், 2009ல், உருவாக்கப்பட்டது. ஆயத்த ஆடை உற்பத்தி, நுாற்பாலைகள் உட்பட தொழில்கள் நிறைந்த மாவட்டமாக இருந்தாலும், தொன்மையான வரலாறு இப்பகுதிக்கு உள்ளது.குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக கரூரில், காவிரியுடன் கலக்கும் அமராவதி ஆற்றின் கரையில், இதுவரை, பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்றிருந்த கோவில்கள், நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில், தற்போது வரை வரலாற்று சின்னங்களாக உள்ளன. இக்கோவில்களில், பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட, கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.இதே போல், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், வரலாற்று ஆய்வாளர்களால், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்திட்டைகள் மற்றும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள், மேற்பரப்பு ஆய்வில் கிடைத்தது.குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம், கோட்டமங்கலம், மடத்துக்குளம் தாலுகா, கடத்துார், கொழுமம், கண்ணாடிப்புத்துார் உட்பட இடங்களில், பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட, கல்வெட்டுகளும், கல்திட்டை உட்பட பெருங்கற்காலத்தைச்சேர்ந்த வரலாற்றுச்சின்னங்களும் உள்ளன.விழிப்புணர்வு இல்லை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், கல்திட்டைகள், நடுகற்கள், முதுமக்கள் தாழி உட்பட பொருட்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சேதப்படுத்தப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.குறிப்பாக இப்பகுதியிலிருந்து பெரும்பாலான கல்திட்டைகள் சேதப்படுத்தப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகளை அழித்தல், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துதல் தொடர்கதையாக உள்ளது.பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட, தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை, கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.சுற்றுலா தலமாக பயன்படும்தற்போது, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தொல்லியல் சார்ந்த பணிகளில், கோவை மாவட்டத்தைச்சேர்ந்த, மாவட்ட தொல்லியல்துறை அலுவலர்களே மேற்கொண்டு வருகின்றனர். எனவே, திருப்பூர் மாவட்டத்துக்கு, தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.அதே போல், போதிய விழிப்புணர்வு இல்லாமல், சேதப்படுத்தப்பட்டு வரும், கல்வெட்டு, சிலைகள், சிற்பங்களை பாதுகாக்க, மாவட்டத்துக்கென தனியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மக்கள் வழிபாட்டால், பாதுகாக்கப்பட்டும், வரலாற்று சின்னங்களை தவிர்த்து, திறந்தவெளியில், சிதைந்து வரும், கல்வெட்டுகளை, அருங்காட்சியகத்தில், வைத்து பராமரிக்கலாம். இதனால், வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதுடன், பழங்கால சின்னங்களை பாதுகாக்கவும் முடியும்.இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக தொல்லியல்துறை அலுவலகமும், உடுமலையில், வரலாற்று பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்கவும் முன்வர வேண்டும்.இதனால், தொழில்சார்ந்த மாவட்ட மக்களுக்கு, முக்கிய சுற்றுலா தலமாகவும், அருங்காட்சியகம் பயன்பட வாய்ப்புள்ளது.