திருவள்ளூர் : ஆந்திர மாநிலத்திற்கு கடத்த, முயன்ற தமிழக ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசி, ஆந்திர மாநிலத்திற்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.இதை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை, இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்படி, டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில், சிறப்பு படை அமைக்கப்பட்டது.இத்தனிப்படையினர், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம், பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஓர் ஆட்டோவை சோதனையிட்டதில், 12 மூட்டைகளில், 600 கிலோ தமிழக ரேஷன் அரிசி இருந்தது.விசாரணையில், பள்ளிப்பட்டு, கேசவன் மனைவி, புஷ்பா, 40, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், முருகேஷ் மகன் ராஜேஷ், 34, என இருவரும், ஆந்திர மாநிலத்திற்கு, ரேஷன் கடத்திச் சென்றது தெரிந்தது.ஆட்டோ மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட அரிசி, திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.