சென்னை : குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் பிடிபட்ட கேரள நபரிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன், 60. அவர், கோவையில் இருந்து ரயிலில், நேற்று முன்தினம் மாலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார்.அங்குள்ள, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை வழியாக, எழும்பூர் ரயில் நிலையம் செல்ல முயன்றார். அப்போது, மெட்ரோ ரயில் நிலைய ஊழியர் பிரேம்குமார், விஜயனின் உடமைகளை சோதிக்க முயன்றார். அப்போது, விஜயன் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.அவரிடம் இருந்த உடமைகளை, 'ஸ்கேன்' கருவி வாயிலாக சோதித்தார். அப்போது, எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரேம்குமார், பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயனிடம் விசாரித்தனர். அவரது பையில் துப்பாக்கி இருந்தது. பார்ப்பதற்கு போலீசார் பயன்படுத்தும், 9 எம்.எம்., ரக துப்பாக்கி போலவே இருந்தது. உடனடியாக போலீசார், விஜயனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.ளதுப்பாக்கியை ஆய்வு செய்தபோது, அது 'டம்மி'யானது என தெரிய வந்தது. அசல் போல இருக்கும் அந்த துப்பாக்கியை, சிகரெட் பற்ற வைக்கும் 'லைட்டர்' ஆக விஜயன் பயன்படுத்தி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கியை, கேரளாவில் உள்ள, தன் நண்பர் கொடுத்ததாக, போலீசாரிடம் விஜயன் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அவரிடம், ரயில்வே துறைக்கான போலி பணி நியமன ஆணைகளும் இருந்தன. 10 ஏ.டி.எம்., கார்டுகள், 16 ஆயிரம் ரூபாயும் இருந்தது. இது, போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.அவர், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தாரா; அவரது பின்னணியில் இருக்கும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, விஜயனை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.