கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பியை, மது போதையில், கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கெட்ணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 32; திருமணம் ஆகாதவர். அவரது மூத்த சகோதரர் சுப்பிரமணி, 43. சகோதரர்கள் இருவரும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தனர்.நேற்று முன்தினம், சென்ட்ரிங் வேலைக்கு கிளம்பிய சுப்பிரமணி, வேறு சிலரை அழைத்து சென்று, சுரேஷை தவிர்த்துள்ளார். இது குறித்து சுரேஷ் கேட்டபோது, கைகலப்பாக மாறியது; சுப்பிரமணியை, தம்பி சுரேஷ் தாக்கியுள்ளார்.
கோபத்துடன் வீட்டில் இருந்து வெளியேறிய சுப்பிரமணி, இரவு மது போதையில் வீடு திரும்பினார். அறையில் துாங்கிக் கொண்டிருந்த சுரேஷின் தலையில், கோடாரியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்த சுரேஷை, அருகாமை வீட்டினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.