மீஞ்சூர் : ஆடு தொட்டி கட்டடம் கட்டாமல், அதற்கான கட்டணம் வசூலிக்க ஏலம் விடுவதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி வியாபாரிகள் உள்ளனர்.பேரூராட்சி நிர்வாகத்தில் ஆடு அடிக்கும் தொட்டி கட்டடம் கட்டித்தர வேண்டும் என, வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆடு அடிக்கும் தொட்டி இல்லாத நிலையில், அதற்கான வரி வசூலுக்காக ஆண்டுதோறும் ஏலம் விடுப்படுகிறது. இந்த ஆண்டும் கட்டடம் கட்டாமல் ஆடு தொட்டி ஏலம் விடுவதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் சார்பில், பேரூராட்சி நிர்வாகத்திடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. சங்க செயல்ர் ஷேக் அகமது தலைமையில், ஆட்டிறைச்சி வியாபாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு அளித்த மனு விபரம்:மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், ஆடு அடிக்கும் தொட்டி கட்டி தரப்படவில்லை.ஆண்டுதோறும் பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுப்போர், வியாபாரிகளிடம் கெடுபிடி செய்து பணம் வசூலிக்கின்றனர். ஆடு தொட்டியே இல்லாமல் எதற்காக ஏலம் விடப்படுகிறது.இந்த ஆண்டு ஆடு அடிக்கும் தொட்டி கட்டாமல் ஏலம் விடக்கூடாது. அதுவரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் உள்ளது.