சென்னை : டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையங்களில், மார்ச் மாதம் வரை கண் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையங்கள் தலைவர் டாக்டர் மோகன் கூறியதாவது:நீரிழிவு நோயின் பின்விளைவுகளின் ஒன்றான, நீரிழிவு ரெட்டினோபதி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரெட்டினோபதி என்ற கண் விழித்திரை நோயால் பாதிக்கப்படுவோருக்கு, பார்வை இழப்பு ஏற்படக்கூடும். எந்தவித அறிகுறியும் ஏற்படாத நோய் என்பதால், ஆண்டுதோறும் கண் பரிசோதனையில் கண்டுபிடித்து, பார்வையை பாதுகாப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பார்வை இழப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், மார்ச் வரை, நாடு முழுதும் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையங்களில், இலவச கண் பரிசோதனை மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஞ்சனா கூறியதாவது:ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும், 90 வயதை தாண்டி நலமுடன் வாழ்வதே எங்களது லட்சியம். தற்போது, 90 வயதை தாண்டி வாழும் நீரிழிவு நோயாளிகளை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நீரிழிவால் சிலருக்கு மூட்டு, தசை, தோள்பட்டை, எலும்புகளில் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த உபாதைகளை சிறிய பயிற்சிகள் வாயிலாக சீரமைக்க முடியும். இதற்காக, உடற்பயிற்சி முகாமை நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.