செங்குன்றம் : அன்புடன் வணங்கி வரவேற்று, நன்றி தெரிவித்து 'ஸ்டிக்கர்' ஒட்டிய போக்குவரத்து போலீசாரின் நுாதன கொரோனா விழிப்புணர்வால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் 'இன்ப அதிர்ச்சி' அடைந்தனர்.
சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின்படி, செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மலைச்சாமி தலைமையில், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் போக்குவரத்து போலீசார், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, முக கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்று, அவர்களுக்கு அரசு மற்றும் காவல் துறை சார்பில் நன்றி தெரிவித்து, வாகனங்களில் 'நன்றி' அறிவிப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டினர்.
மேலும், கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் அரசு வழிகாட்டுதலை கடைப்பிடிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.வழக்கமாக கண்டிப்பு காட்டி கோபப்படும் போலீசாரின் நேற்றைய நுாதன விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு, இந்த நிகழ்வு 'இன்ப அதிர்ச்சி'யாக இருந்தது.