சென்னை : சென்னை, வியாசர்பாடி, புதுநகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம், 21; தரமணியில் உள்ள சட்ட கல்லுாரியில் ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டே, கொடுங்கையூரில் உள்ள மருந்தகத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.அப்துல் ரகீம், கடந்த 14ம் தேதி நள்ளிரவு பணி முடித்து, கொடுங்கையூர், எம்.ஆர்., நகர் சந்திப்பில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட கொடுங்கையூர் போலீசார், அப்துல் ரகீமை நிறுத்தி, முக கவசம் அணியாதது குறித்து கேட்டனர்.உடனே அவர் சட்டை பையில் இருந்த முக கவசத்தை எடுத்து அணிந்தார். ஆனாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோபமடைந்த அப்துல் ரகீம், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அப்துல் ரகீம் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.போலீசார் அவரை கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கிஉள்ளனர். இதில், அப்துல் ரகீம் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாணவரை தாக்கிய காவலர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு,நேற்று சென்னை கலெக்டர் விஜயராணி, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புகார் தொடர்பாக, காவல் நிலை ஆணை எண். 151ன் கீழ், 15 நாட்களுக்குள், விரிவான விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்துல் ரகீம் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்கள் உத்திரகுமார், பூமிநாதன், ஹேமநாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி உட்பட 9 போலீசார் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டக் கல்லுாரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில உள்துறை செயலர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.