உடுமலை;அறுவடை தீவிரமடைந்து, வரத்து அதிகரித்துள்ளதால், பச்சை மிளகாய் விலை சந்தைகளில் சீராகி வருகிறது.உடுமலை சின்னவீரம்பட்டி, மலையாண்டிபட்டணம், குட்டியகவுண்டனுார் உட்பட கிராமங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.சாகுபடிக்கு, விதைகள் நடவை தவிர்த்து, நாற்றுகளை வாங்கி நடவு செய்கின்றனர்; சொட்டு நீர் பாசனம் வாயிலாக பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.வடகிழக்கு பருவமழை சீசனில், அதிக மழை காரணமாக, பச்சை மிளகாய் சாகுபடி பாதித்தது. உடுமலை சந்தைக்கு வரத்து குறைந்தது; ஒட்டன்சத்திரம் சந்தைக்கும், கேரளாவுக்கும் மிளகாய் அனுப்புவது பாதிக்கப்பட்டது.உற்பத்தி இல்லாததால், விலை கிலோ, 120 ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. பருவமழைக்கு பிறகு, நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில், தற்போது பச்சை மிளகாய் அறுவடை துவங்கி, சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.எனவே, அதிகப்படியாக இருந்த விலை குறைந்து, நேற்றைய நிலவரப்படி, தரத்தின் அடிப்படையில், கிலோ, 60 ரூபாய் வரை விலை கிடைத்தது. கேரளாவுக்கு அனுப்ப, வியாபாரிகள் அதிகளவு கொள்முதல் செய்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மாதத்தை விட, குறைந்தாலும், தற்போது கிலோவுக்கு, 60 ரூபாய் என கட்டுபடியாகும் விலை கிடைத்து வருகிறது. வரத்து அதிகரித்தால், விலையில் மாற்றம் ஏற்படலாம்,' என்றனர்.