பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் வீடுகள் முன், நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பொதுமக்களிடம் கைகழுவுதல், சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அரசு உத்தரவுப்படி, கொரோனா தொற்று உறுதியானவர்களது வீடுகள், தனிமைப்படுத்தப்படுகிறது. மேலும், வீடுகளின் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, ஏழு நாட்களுக்கு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சியில், கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களின் வீட்டின் முன், நோட்டீஸ் ஒட்டப்பட்டு; கிருமிநாசினி தெளித்து பிளிச்சிங் பவுடர் துாவப்படுகிறது.பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.ஒத்துழைக்கணும்!பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, உடல் நலம், வேறு ஏதாவது நோய்கள் குறித்து விபரம், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் விபரங்கள் கேட்டறியப்படுகிறது.ஆனால், கொரோனா உறுதியானவர்களில் சிலர் முழுமையான விபரம் தர தயக்கம் காட்டுகின்றனர். போனில் அழைத்து பேசினால் விபரம் தர மறுப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒத்துழைப்பு வழங்கி முழு விபரங்களை வழங்க வேண்டும், என, நகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் வீடு முன், நோட்டீஸ் ஒட்டப்பட்டது.