கோவில்பாளையம்:கோவை மாவட்டத்தில், ஒன்றரை மாதமாக, அம்மா சிமென்ட் சப்ளை செய்யப்படாததால், ஏழை நடுத்தர மக்கள் தவிக்கின்றனர்.தமிழகத்தில், வெளிச்சந்தையில் சிமென்ட் விலை மிக அதிகமாக இருந்ததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாமல் தவித்தனர். இதையடுத்து, கடந்த, 2015ல், அ.தி.மு.க., அரசு அம்மா சிமென்ட்டை அறிமுகப்படுத்தியது, கிராம ஊராட்சிகளில், 1,500 சதுர அடிக்குள், வீடு கட்டுவோருக்கு, ஒரு மூட்டை, 190 ரூபாய் விலையில், அதிகபட்சம் 750 மூட்டை வழங்கியது. ஏற்கனவே உள்ள வீடுகளில் பராமரிப்பு பணி செய்ய அதிகபட்சம் 25 மூட்டைகள் வழங்கப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு முன் அம்மா சிமென்ட் மூட்டை, 190 ரூபாயிலிருந்து, 216 ரூபாயாக உயர்த்தப்பட்டது. எனினும் வெளிச்சந்தையை விட இது ஒரு மூட்டைக்கு 170 ரூபாய் குறைவு என்பதால், கிராமங்களிலிருந்து, ஏழை, நடுத்தர மக்கள் ஆர்வமாக வந்து சிமென்ட் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் சில மாதமாக அம்மா சிமென்ட் ஊராட்சி ஒன்றியங்களுக்கு சப்ளை செய்வது குறைந்து வந்தது, கடைசியாக கடந்த டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சிமென்ட் சப்ளை செய்யப்பட்டது. அதன் பிறகு ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. இதுவரை அம்மா சிமென்ட் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சப்ளை ஆகவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, இதற்கான விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் நடையாய் நடக்கின்றனர், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக அரசு சார்பில் வலிமை என்னும் சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த சிமென்ட் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே, மணல் விலை ஒரு லோடு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது, இரும்பு கம்பி விலையும் அதிகரித்து விட்டது, செங்கல் விலை 50 சதவீதம் அதிகரித்து விட்டது. சிமென்ட் ஒரு மூட்டை விலை 390 ரூபாய் ஆகிவிட்டது. எனவே, கட்டுமான பணி செய்ய முடியாமல் தவிக்கிறோம், அம்மா சிமென்ட் வாங்குவதற்கு தேவையான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கிறோம். அம்மா சிமென்ட் வழங்கினால் வீடு கட்டுவதற்கு உபயோகமாக இருக்கும், அரசு விரைவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அம்மா சிமென்ட் வழங்க வேண்டும்' என்றனர்.