பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள அருள்மிகு பாலமுருகன், ஜோதி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.இவ்விழாவையொட்டி ஜோதிபுரம் ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஏந்தி, திருவீதி வலமாக திருக்கோயில் வளாகம் வந்து சேர்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நிலமகள் வழிபாடு, மண்ணை மகிழ்விக்கும் புற்றுமண் வழிபாடு, சூரியன், சந்திரன் வழிபாடு, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசம் நிறுவுதல், மூலவர் பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகள் எண் வகை மருந்து சாத்துதல், ஆதார பீடத்தில் நவமணிகள் இருத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை சிவனடியார்களுக்கு அன்பு வழிபாடு செய்தல், பேரொளி வழிபாடு, பன்னிரு திருமுறை திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அருள்மிகு பாலமுருகனுக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடு, வேள்விச்சாலை, முதல்நிலை வழிபாடுகள் ஆகியன நடக்க இருக்கிறது.முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை காலை, 10:00 மணி நடக்கிறது. மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு தெய்வத் திருமணம் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.