பெ.நா.பாளையம்:கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் இருந்து, அடிக்கடி காட்டு யானைகள் மலையோர கிராமங்களை நோக்கி, வருவது அதிகரித்து வருகிறது.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒற்றை யானை மற்றும் ஆண் யானைகள் குழுவாக மலை கிராமங்களை நோக்கி வந்துள்ளன. வனத்துறையினர் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியான பூச்சியூர், பாலமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின்நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வெளியில் வருவதை தவிர்த்து,கவனத்துடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே உறங்குவது கூடாது.இரவில் வெளியே செல்லும் போது, 'டார்ச் லைட்' எடுத்து செல்ல வேண்டும். காட்டு யானைகளின் வழித்தடங்களில், நடமாடுவதை தவிர்க்க வேண்டும். யானை நடமாட்டம் இருப்பது தெரியவந்தால், வன பணியாளர்களுக்கு உடனடியாகதகவல் தெரிவிக்க வேண்டும்'' என்றனர்.