அன்னூர்:மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து தர, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழக அரசு, கிராம ஊராட்சிகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு புனரமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, அன்னூர் ஒன்றியத்தில், பிள்ளையப்பம் பாளையம் மற்றும் கனுவக்கரை ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த ஊராட்சிகளில், கடந்த இரண்டு நாட்களாக, வீடு வீடாகச் சென்று, 'வீட்டுக்கு வரும் தூய்மை காவலரிடம் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டும், என, அறிவுறுத்தினர்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமா, சுதாகர் ஆகியோர் 'வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் அப்படியே கலக்கக்கூடாது. இதனால் நீர் நிலையில் உள்ள நீர் பாதிக்கும். மாசுபடும். எனவே, நீர் நிலையில் கலப்பதற்கு முன்பு அங்கு உறிஞ்சு குழி அமைத்து அந்தக் கழிவு நீரை சுத்திகரித்து, அதன்பின் நீர்நிலையில் விட வேண்டும்.இதற்கு ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற, உறிஞ்சு குழி அமைத்துக் கொள்ளலாம்' என்றனர்.இரண்டு நாட்களாக வீடுகளிலிருந்து பெறப்பட்ட மக்கும் குப்பைகள் உரம் தயாரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மக்காத குப்பைகள் சுத்தப்படுத்தப்பட்டு எடை அளவீடு செய்யப்பட்டது.இந்த கணக்கெடுப்பு பணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீராசாமி, ஊராட்சி செயலர் சாமிநாதன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.