குப்பையை கொட்ட இடம் :தேடும் பேரூராட்சி நிர்வாகம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
குப்பையை கொட்ட இடம் :தேடும் பேரூராட்சி நிர்வாகம்
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

அன்னூர்:வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் தவிக்கிறது.அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு தினமும், 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணியாளர்கள் குப்பையை சேகரித்து, அந்த வார்டில் உள்ள சிறிய கிடங்கில் சேர்த்து, அதன் பின்னர் அதை வெளியேற்றுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி பணியாளர்கள் கூறியதாவது:தினமும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கே கொட்டுவது என தெரியவில்லை. குளத்தின் வடக்குப் பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டி வந்தோம். தற்போது அத்திக்கடவு திட்டத்தில் குளத்தில் நீர் நிரப்பப்பட உள்ளதால் பொதுப்பணித்துறை குளத்தில் குப்பை கொட்ட கூடாது என தடை விதிக்கிறது. இதையடுத்து அல்லிகுளம், கோவை ரோடு, நாகமாபுதூர் என ஒதுக்குப்புறமான இடங்களில் குப்பைகளை கொண்டு போய் கொட்டி வருகிறோம்.ஆனால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குப்பை லாரியை சிறை பிடிக்கின்றனர். குப்பனூர் ஊராட்சியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை இன்னும் பேரூராட்சியிடம் ஒப்படைக்கவில்லை.இத்துடன் அன்னூர் பேரூராட்சியில் காக்காபாளையத்தில் நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. அதுவும் வழக்கில் உள்ளதால் அங்கும் குப்பை கொட்ட முடியாத நிலை உள்ளது, இதனால் தினமும் சேகரிக்கப்படும் குப்பையை எங்கு கொட்டுவது என தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பேரூராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X