மேட்டுப்பாளையம்:காரமடை அடுத்த, மருதூரில் ஊராட்சி அலுவலகம் அருகே, மருதூர் கிராம கூட்டுறவு விவசாய கடன் சங்க கட்டடம் உள்ளது. 1968ம் ஆண்டில் கட்டிய கட்டடம் நல்ல நிலையில் உள்ளது. இச்சங்கத்தின் முன் பகுதியில் போட்டுள்ள, கான்கிரீட் கட்டடத்தின் மேல் பகுதியில், சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இக்கட்டடத்தில் தற்போது மருதூர் ரேஷன் கடை செயல்படுகிறது.இதுகுறித்து, மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறுகையில்," மருதூர் கிராம கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தின் மீது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் கட்டடத்தை பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இக்கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு, கூட்டுறவு கடன் சங்க கட்டடத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில், புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணி துவங்கின. ஆனால் தற்போது பணிகள் நின்றுள்ளது. எனவே விரைவில் ரேஷன் கடையை கட்ட வேண்டும்," என்றார்.