பவானி:ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவியை, 3,000 ரூபாய் கடன் தராததால், குடும்ப நண்பரே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே, கே.கே.நகரைச் சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற தனியார் கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி, 55; நேற்று முன்தினம் மதியம் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். 6 சவரன் தாலிக்கொடி மாயமாகி இருந்தது.'சிசிடிவி' கேமராவில், அதே பகுதியைச் சேர்ந்த கணேசனின் குடும்ப நண்பரான நிகோலஸ், 40, வந்து சென்றது தெரிந்தது.
காளிங்கராயன் பாளையத்தில் நிகோலசை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: நிகோலசின் தந்தை தனராஜும், பேராசிரியர் கணேசனும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அதேபோல் நிகோலசின் மனைவி குளோரி தேவரதி, கணேசனின் மாணவி ஆவார்.இதனால் நிகோலஸ், கணேசன் குடும்பத்துக்கு பழக்கம் உண்டு. வளர்மதி, கணேசனிடம் அவ்வப்போது நிகோலஸ் கடன் வாங்குவார். ஆனால், கடைசியாக சில முறை வாங்கிய பணத்தை தரவில்லை.நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற நிகோலஸ், வளர்மதியிடம் 3,000 ரூபாய் கேட்டுள்ளார். ஏற்கனவே வாங்கிய பணத்தை தராததால், பணம் தர மறுத்துஉள்ளார்.
பணம் கேட்டு நிகோலஸ் நச்சரிக்கவே, வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த கத்தியை நிகோலஸ் மீது வீசி, வெளியே போ என்று வளர்மதி திட்டிஉள்ளார்.இதில் ஆவேசம் அடைந்த நிகோலஸ், அதே கத்தியால் வளர்மதியை சரமாரியாக குத்தி கொலை செய்து உள்ளார். 6 சவரன் தாலிக்கொடி, ஒரு கவரிங் நகையை எடுத்து தப்பியுள்ளார். நகையோடு மும்பை தப்ப இருந்த நிலையில் சிக்கி விட்டார். இவ்வாறு போலீசார் கூறினார்.