ஓசூர்:ஓசூர் அருகே, பிப்., 6 ல் திருமணம் செய்யும் ஜோடி, 'மெட்டாவெர்ஸ்' எனும் மெயர்நிகர் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா, சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகள் ஜனகநந்தினி, 23. பி.டெக்., பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவருக்கும், சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த ஐ.ஐ.டி.,யில் புராஜெக்ட் அசோசியேட்டாக பணியாற்றி வரும் பி.டெக்., பட்டதாரி தினேஷ், 25, என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க ராமசாமி ஏற்பாடு செய்தார்.
ஆனால், கடந்த ஏப்ரலில் ராமசாமி உயிரிழந்தார். தன் தந்தை ராமசாமி தலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என, ஜனகநந்தினி ஆசைப்பட்டார்.இதனால் வரும் பிப்., 6ல் திருமணம் நடந்த பின், 'மெட்டாவெர்ஸ்' முறையில் திருமண வரவேற்பு நடத்த, மணமகன் தினேஷ் முடிவு செய்துள்ளார். மெட்டாவெர்ஸ் என்பது இயற்கை, டிஜிட்டல் மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்படும் மெய்நிகர் உலகம்.
இதில் நுழையும் எல்லாரும் டிஜிட்டல் அவதாரம் எடுப்பர்.பிப்., 6ல் திருமணம் முடிந்த பின், மணமக்கள் இருவரும் லேப்டாப்களை திறந்து, 'லிங்க்'கை ஷேர் செய்த பின், அந்த லிங்க் மூலம் திருமண வரவேற்பில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் டிஜிட்டல் அவதாரமாக பங்கேற்கலாம்.ஹாரி பாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான, ஹாக்வார்ட்ஸ் மாளிகையில் திருமண வரவேற்பு நடக்கும். இதற்கு மணமகளின் தந்தையான, மறைந்த ராமசாமியின் டிஜிட்டல் அவதாரம் தலைமை வகிக்கும்.
மணமக்களின் டிஜிட்டல் அவதாரங்கள், விருந்தினர்களை வரவேற்கும். விருந்தினர்களும் டிஜிட்டல் அவதாரங்களாக வந்து, மணமக்களை ஆசிர்வதிப்பர். மணமகள் ஜனகநந்தினி, மணமகன் தினேஷ், மணமகளின் தந்தை ராமசாமி ஆகியோரது டிஜிட்டல் அவதாரம், தத்ரூபமாக அவர்களை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.