மூணாறு:கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு நாள் பாதிப்பு 46,387 ஆக இருந்தது. நோய் பாதிப்பு சதவிகிதம் 40.21 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் வரை ஒமைக்ரான் மூலம் 707 பேர் பாதிக்கப்பட்டனர்.நோய் பரவல் அதிகரித்ததால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை கணக்கிட்டு ஏ, பி, சி என பிரித்து அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் பொறுப்பு கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வியாழக்கிழமைகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை சுகாதாரதுறையினர் கணக்கிட்டு பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படும்.
நேற்று முன்தினம் நிலவரப்படி அதிக பாதிப்புகளைக் கொண்ட 'சி' பிரிவில் எந்த மாவட்டமும் உட்படுத்தவில்லை.எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்கள் 'ஏ' பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மதம், சமூகம், அரசியல், கலாச்சாரம் உள்பட பொது நிகழ்ச்சிகளிலும் திருமணம், இறுதி சடங்கு ஆகியவற்றிலும் அதிகபட்சம் 50 பேர் பங்கேற்கலாம்.
இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய மாவட்டங்கள் 'பி' பிரிவில் உட்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேர் பங்கேற்கலாம். தவிர நாளை மற்றும் ஜன.30 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்குக்கு நிகராக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அதேசமயம் அத்தியாவசிய கடைகள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.