கண்டமங்கலம்:கண்டமங்கலம் அருகே தனியார் பஸ் கண்டக்டர் இறந்து கிடந்தது குறித்து, தந்தை, மகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பாக்கம் காலனி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 40; தனியார் பஸ் கண்டக்டர்.இவர், நேற்று முன்தினம், கரும்பு காட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
கண்டமங்கலம் போலீசார் கூறியதாவது:கடந்த 19ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த லோகநாதன், சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில், கரும்பு சோலை கத்தைகள் மீது மயங்கி விழுந்துள்ளார். மறுநாள் 20ம் தேதி அதிகாலை, கரும்பு சோலை கத்தைகளை ஏற்றிச்செல்ல முரளி, 52; அவரது தந்தை செவ்வராஜ், 70 ஆகிய இருவரும் மினி சரக்கு வேனுடன் அங்கு சென்றுள்ளனர். மினி வேனை பின்நோக்கி நகர்த்தியபோது, கரும்பு சோலை மீது போதையில் படுத்திருந்த லோகநாதன் தலையில் பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லோகநாதன், சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சிஅடைந்த தந்தை, மகன் இருவரும் சோலையை ஏற்றாமல், வண்டியுடன் அங்கிருந்து சென்று உள்ளனர். மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.