கோவை:கோவை அருகே வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து, 15 லட்சம் ரூபாய் கொள்ளைஅடித்த நபர்களை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம்; கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர். இவரது வீட்டில் கடந்த 15ம் தேதி, மர்ம நபர்கள், வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து, 15 லட்சம் ரூபாய் பணம், கண்காணிப்பு கேமரா, 'ஹார்டு டிஸ்க்' மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு கோவை ஈச்சனாரி அருகே, நான்கு ரோட்டில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படி வந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.இதில், கிணத்துக்கடவில் வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளையடித்த கோவையைச் சேர்ந்த பிரவீன்குமார், 36; மணிகண்டன், 37;மோகன்குமார், 35, ஆகியோர் என தெரிந்தது. இவர்களை கைது செய்து, ௩ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இவர்களுக்கு உதவியதாக, மேலும் நால்வரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரை தேடுகின்றனர்.