கோவை:கோவையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பரிசு மழை பொழிந்தது. வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கார், பைக், தங்க நாணயம், சைக்கிள், 'டிவி' என ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
கோவை, செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலை மைதானத்தில்ஜல்லிக்கட்டு நடந்தது. 1,250 காளைகள்வாடிவாசலில் பூஜைக்கு பின், மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காத்திருந்த வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர்.காளையை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், கட்டில், சைக்கிள், பீரோ, 'டிவி', அண்டா, ஹாட்பாக்ஸ் ஆகியவை உடனுக்குடன் பரிசாக வழங்கப்பட்டன. யாராலும் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி முடிவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''போட்டிக்கு 1,250 காளைகள் வந்திருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் 873 காளைகள் மட்டுமே களம் இறங்க முடிந்தது. 400 வீரர்கள் களம் இறங்கினர். ''இதில், 21 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் குருவித்துறை மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆல்டோ கார் பரிசாக வழங்கப்படுகிறது,'' என்றார்.
மாலை 5:30 மணி வரைஇரண்டாம் பரிசாக, 19 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த பிரபா என்பவருக்கு புல்லட் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை 18 காளைகளை அடுக்கிய திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சேர்ந்த கார்த்திக் பெற்றார்.போட்டியை பார்வை யிட பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், ஆளுங் கட்சியினர், வி.ஐ.பி.,க்களின் கூட்டமே பெரும் கூட்டமாக இருந்தது.
போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 60 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு மைதானத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காலை 7:30 மணிக்கு துவங்கிய போட்டி, மாலை 5:30 மணி வரை நடந்தது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, கூத்தைப்பார் முனியாண்டவர்
கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 700 காளைகள்,
400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
நான்கு சுற்றுகளாக நடந்த
ஜல்லிக்கட்டில், அதிக காளைகளை அடக்கிய 10 வீரர்களுக்கு, தங்கக் காசு
வழங்கப்பட்டது.போட்டியில், வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடுவதற்கு, உள்ளூர்
காளைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காளை உரிமையாளர்கள் சிலர்,
வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் கொண்டு வந்த காளைகளை, வாடிவாசல் முன்
அவிழ்த்து விட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், காளைகளை
அவிழ்த்து விட்டவர்களை விரட்டிஅடித்தனர்.
வாடிவாசல் வழியாக அவிழ்த்து
விடப்பட்ட காளை ஒன்று, அங்கிருந்து வெளியேறாமல் சுற்றிச்சுற்றி வந்ததால்,
போலீசார் தடியால் அடித்து அந்த காளையை வெளியேற்ற முயன்றனர். நிகழ்ச்சி
நடத்தியவர்கள், 'காளையை அடிக்க வேண்டாம்' என அறிவுறுத்திய போதிலும்,
போலீசார் காளையை அடித்த சம்பவம், காளை உரிமையாளர்கள் மற்றும்
பார்வையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.