திண்டுக்கல்:திண்டுக்கல் பைனான்சியர் வீட்டில் கொள்ளை போன 116 பவுன் நகைகளை மீட்ட போலீசார், தென்காசியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் கிழக்கு ரதவீதி ஜான்பிள்ளை தெருவை சேர்ந்த பைனான்சியர் கண்ணன் 52. இவரது மனைவி கவிதா 45. கடந்த ஆண்டு நவ.15 நள்ளிரவில் இவரது வீட்டின் மேல் மாடியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 145 பவுன் நகை, சொத்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
திண்டுக்கல் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். நேற்று இவ்வழக்கில் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற புளிமூட்டை 35, நவாஸ் 37, ஆகியோரை கைது செய்த போலீசார், ரூ.60 லட்சம் மதிப்புள்ள 116 பவுன் நகைகள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை, டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மினா, எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.