நரிக்குடி-நரிக்குடி அருகே நாலுாரில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால், நெல்கள் பூசணம் பிடித்து கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நரிக்குடி நாலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. நரிக்குடி பகுதியில் இன்று வரை துவக்கப்படவில்லை. விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை காயவைத்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். தொடர்ந்து வெயில் , பணியிலும் கிடப்பதால் நெல்கள் முளைப்பு, பூசணம் பிடித்து பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு டிசம்பரிலே நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்களை பெற்றனர். தற்போது இன்று வரை காலதாமதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். நாலுார் விவசாயி முருகேசபாண்டியன்: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவிக்கப்பட்டதை அடுத்து களத்தில் காயவைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நெல்கள் பாதிக்கும் நிலை உள்ளது. சிறு குறைபாடு ஏற்பட்டாலும் நெல்களை விற்க முடியாது. இதனை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் அடிமாட்டு விலைக்கு நெல்களை வாங்குகின்றனர். அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளிடமிருந்து தப்பிக்க, விரைந்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், என்றார்.