அருப்புக்கோட்டை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் குகையும் பெரிய மர பொங்குமே மனிதனுக்கு வீடாக இருந்தது .தீ கண்டுபிடிக்கப்பட்ட பின்பு நாடோடியாக அலைந்த மனிதன் நிரந்தரமாக வாழும் அமைப்பை உருவாக்கி கொண்டான். வேளாண்மை கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மனிதன் நாடோடி வாழ்க்கையை கைவிட்டு ஓரிடத்தில் தங்கி தங்களுக்கான நிலையான குடியிருப்பை உருவாக்கி கொண்டான் என்றும் வரலாற்று குறிப்பில் உள்ளதுஅந்த வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புகள் உருவான விதம், அது வளர்ந்த விதம் பற்றி தெரிந்து கொள்ள முற்படும் போது, கிராமத்தின் பெயர் உருவானவிதம், குடியிருப்புகள் உருவான விதம் என ஒவ்வொன்றும் பல வரலாறுடன் பண்பாட்டுத் தகவல்களை நமக்கு வழங்கிய வண்ணம் உள்ளது. இன்று நாம் பல கிராமங்களில் குடிசை வீடுகள் முதல் காங்கிரீட் வீடுகள் வரை பார்க்கிறோம்.ஆனால் அந்த குடிசை வீடுகள் இப்போது எந்த வகையில் கான்கிரீட் வீடுகளாக மாறின என்பதற்கான வரலாறு பண்பாட்டு பரிணாம வளர்ச்சியை நாம் அறிய முற்படுவதில்லை. ஒரு தனிமனிதன் தன் பொருளாதாரத்தில் முன்னேறும்போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக தன்னுடைய வசதிக்கு ஏற்றாற்போல் மாற்றி கொள்கிறான்.அந்த வகையில் அருப்புக்கோட்டை அருகே புரசலுார் கிராமத்தில் பொருளாதார வசதிகள் இருந்தும் அனைத்தும் ஓட்டு வீடுகளாகவே உள்ளன. இதற்கு காரணம் புலவர் விட்ட சாபமே என்கின்றனர் புரசலுார் கிராமத்தினர். கான்கிரீட் வீடுகள் கட்ட அச்சம் ரமேஷ், புரசலூர், பண்பாட்டு ஆய்வாளார்: புரசலுார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வூரின் கண்மாயில் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் திருவருள வாசக நல்லுார் என அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் புரசலுாராக ஆக மாறிவிட்டது. சிலர் இவ்வூரை புரைசலூர் என அழைக்கப்பட்டதாகவும் புரைசல் என்றால் ரகசியம் காத்தல் என பொருள்படும் கூறுகின்றனர். ஊரில் ஓட்டு வீடுகள் இருப்பதற்கு தனியே ஒரு கதை உள்ளது.இக்கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. அனைத்தும் ஓட்டு வீடுகள். முன்பு குடிசை வீடுகள் இருந்துள்ளது. ஆனால் தற்போது பொருளாதார வசதியுள்ள ஒரு சிலராலும் கூட காங்கிரீட் வீடுகள் கட்ட முடியவில்லை. காங்கிரீட் வீடுகள் கட்ட முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு உயிர் பலி ஏற்பட்டுவிடுகிறது. சமீபத்தில் காங்கிரீட் வீடுகள் கட்ட முயற்சித்தவர்களின் வீட்டில் உயிர்பலி ஏற்பட்டுவிட்டது. இதனால், மற்றவர்களும் தங்கள் வீடுகளில் இது போல் நடந்து விடும் என்ற அச்சத்தில் காங்கிரீட் வீடுகள் கட்டுவது இல்லை. இக்கிராமத்தின் அடையாளம் ஓட்டு வீடுகளே.புலவர் சாபத்தாலே ஓட்டு வீடுகள் செல்லப்பாண்டியன், பேராசிரியர், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையம்: கிராமத்தில் ஓட்டு வீடுகள் மட்டுமே கட்டுகிறார்கள் கான்கிரீட் வீடுகள் கட்டுவது இல்லை என்ற செய்தியறிந்து பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தின் சார்பாக கள ஆய்வு செய்தோம். கிராமத்தில் இன்றைக்கும் ஓட்டு வீடுகள் மட்டுமே கட்டப்படுவதற்கு செவிவழி செய்தியாக இருக்கும் ஒரு நாட்டார் கதையே காரணம். ஒரு சமயம் இவ்வூரில் அறுவடையின்போது நெல்மணிகளை ஒரு புலவர் தன் கையால் மூன்று முறை அள்ளி செல்வாராம். அவ்வாறு செய்வதை கண்ட ஒரு சிலர், இவர் இவ்வாறு செய்வது நம்முடைய வளத்தை குறையவைக்கும் என அவரைக் கேலி செய்துள்ளனர். கோபமடைந்த அந்த புலவர் ஊருக்கு சாபம் விட்டு விட்டாராம். இவ்வூரில் கண்ணில்பட்ட அனைத்திற்கும் சாபம் இட்டுள்ளார். ஊரின் குடியிருப்புகளை பார்த்த அவர் இந்த குடியிருப்புகள் அனைத்தும் இவ்வாறே இருக்க வேண்டும் , எவ்வளவு பொருளாதார வசதி ஏற்பட்டாலும், குடியிருப்புகளில் எந்தவித மாற்றமும் வரக் கூடாது.செம்மறி ஆடு எருமை மாடுகளை கண்டவர், இவைகளும் இந்த ஊரில் செழித்து வளரக் கூடாது என சாபம் இட்டுள்ளார். இதனால் இவ்வூரில் எருமை மாடுகளும் செம்மறி ஆடுகளும் வளர்க்கப்படுவதில்லை என்கின்றனர் இக்கிராமத்தினர். மேலும், கோபத்துடன் புளிய மரத்தடியில் அமர்ந்த அவர், அந்த மரங்களில் அதிகமான புளியங்காய் இருப்பதை கண்டு புளிய மரங்களில் புளி காய்க்க கூடாது எனவும் , சாபமிட்டு விட்டார். இருப்பினும் காலம் மாற தொடங்கிய பின்னும் செம்மறி ஆடுகள் , எருமை மாடுகள் வளர்க்க முற்பட்டாலும் அவைகள் இறந்து விடுவதாக கிராமத்தினர் கூறுகின்றனர். இதற்கு புலவரின் ஒரு சாபமாக இருக்குமோ எனவும் நம்பிக்கையில், அவர்கள் கால்நடைகளை வளர்ப்பதில்லை. சில உயிர்ப்பலிகள் ஏற்பட்டதாலும் கான்கிரீட் வீடுகள் கட்டுவதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.இன்றைக்கு எவ்வளவோ அறிவியல் வளர்ந்து விட்டாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற பகுத்தறிவு வளர்ந்து விட்டாலும், சாமானிய மக்களுடைய வாழ்வில், தாக்கத்தை ஏற்படுத்தும் இவ்வாறான நாட்டார் கதைகள் மக்களுடைய அன்றாட வாழ்வியலை தீர்மானித்துக் கொண்டு தான் இருக்கிறது. பெயர் தெரியாத ஒரு புலவரின் சாபம் இந்த கிராமத்தில் மக்களுடைய வாழ்க்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற இவர்களின் நம்பிக்கை போல் தமிழகத்தின் பல கிராம மக்களின் வாழ்வியலை தீர்மானிக்க கூடிய ஒரு காரணியாக இது போன்ற நாட்டார் வழக்காற்றியல் கதைகள் நாம் காணலாம்,என்றார்.