லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியில் துவங்கி போடி வரை உள்ள 18 ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும்.
இக்கால்வாய் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், வெம்பக்கோட்டை, பொட்டிபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி கிராமங்களில் 21 கண்மாய்கள் மூலம் 2045 ஏக்கர் நிலங்களும், போடி தாலுகா மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, கோடாங்கிபட்டி கிராமங்களில் 4614 ஏக்கர் நிலங்களும் பயன்பெறுகின்றன.
நிலத்தடி நீர்மட்டம் மூலம் மானாவாரி நிலங்களும் மறைமுக பயன்பெறுகின்றன.கால்வாயின் கரைப்பகுதி அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் லோயர்கேம்பில் இருந்து 20 கி.மீ., தூரம் வரை கால்வாயின் தரைப்பகுதியில் சிமென்ட் தளம், இரு பக்கவாட்டில் தடுப்புச்சுவர் மற்றும் உள் பூச்சு ஆகியவற்றிற்காக 2021 ஜன. 22 ல் ரூ.59.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்க இருந்தது.எதிர்ப்புஇந்நிலையில் தரைப்பகுதியில் சிமென்ட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என கூடலூர் முல்லைச்சாரல் விவசாய சங்கம், பாரதிய கிசான் சங்கம் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறையினருக்கு புகார் மனு அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து தற்போது கால்வாயின் தரைப்பகுதியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணிகளை மட்டும் ரத்து செய்து பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வாய்க்காலின் இரு பக்க வாட்டில் தடுப்புச் சுவர் மற்றும் உள் பூச்சு பணிகளுக்கு மறு மதிப்பீடு தயார் செய்து விரைவில் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.