கம்பம்- -காமயகவுண்டன்பட்டியில் குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கோரி எம்.எல்.ஏ.க்களிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு லோயர்கேம்பிலிருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதாக குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது. பேரூராட்சி தனி உறைகிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்கிறது. கடந்த மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானம் செய்தனர்.உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும், மக்களை சமாதானம் செய்ய நேற்றுமுன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், செயற்பொறியாளர் ராஜாராம், செயல்அலுவலர் மல்லிகா பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.க்கள் ,பொதுமக்களிடம் இனிமேல் இது போல் நடக்காது. குடிநீர் வழக்கமாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இக் கோபம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என பொதுமக்கள் கூறினர்.